கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை காலத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலவிய கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் போக்குவரத்துத் துறையில் பல முடக்கங்கள் ஏற்பட்டன. இதனால் மக்கள் தங்களது ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
2025.11.25 முதல் 2025.12.24 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
குறித்த அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், அவை காலாவதியான திகதியிலிருந்து மேலதிகமாக ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், கடந்த 2025 டிசம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு (Extraordinary Gazette) தற்போது நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதலைப் பெறுவதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாரதிகள் எவ்வித அபராதமும் இன்றி அல்லது சட்டச் சிக்கல்கள் இன்றித் தங்களது அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தவும், பின்னர் புதுப்பித்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை வழிவகுத்தது.
தற்போது அமைச்சரவை வழங்கியுள்ள இந்த அனுமதியைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுச் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படவுள்ளது.

