குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

கெமுனு விஜேரத்ன

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அதாவது, ‘மெட்ரோ பஸ்கள்’ தொடர்பாகத் தான் வெளியிட்ட கருத்தொன்றை மையப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக இடம்பெறும் அவதூறுகள் குறித்து அவர் இம்முறைப்பாட்டைத் பதிவு செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இந்தத் திட்டத்தை 10 வருடங்களுக்கு முன்னரே தானும் ஆரம்பிக்கத் தயாராகியிருந்ததாகவும், இருப்பினும் இந்தத் திட்டம் கடந்த கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதற்கு அதிகளவிலான பணம் செலவிடப்பட்டதன் காரணமாக அத்திட்டம் தோல்வியடைந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மெட்ரோ பஸ் என்பது கடந்த காலத்தில் புதிதாக வந்த ஒரு விடயம் அல்ல. 2023ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இது குறித்த யோசனைத் திட்டமொன்றைப் போக்குவரத்து அமைச்சிடம் நான் சமர்ப்பித்திருந்தேன்.

அது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணம் என்னிடம் உள்ளது. சீனா எக்சிம் வங்கியின் கடனைப் பெற்றே இதனை நாம் செய்ய வந்தோம்.

மக்களின் பணத்திலோ அல்லது மக்களின் வரிப் பணத்திலோ நாங்கள் இதனைச் செய்ய முயலவில்லை. நான் எப்போதும் அனைத்து அரசாங்கங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு நபர்.

இதே பஸ்கள் 10 வருடங்களுக்கு முன்னர் லேலண்ட் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டன.

லேலண்ட் நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். அரசாங்கப் பங்குகளைக் கொண்ட இந்நிறுவனம், 10 வருடங்களுக்கு முன்னர் தாழ்தளத்தைக் கொண்ட இதுபோன்ற 60 பஸ்களைக் கொண்டுவந்தது.

அப்படிக் கொண்டுவரப்பட்ட பஸ்கள் தற்போது லேலண்ட் நிறுவனத்தினால் ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

தயவுசெய்து பனாகொடவில் உள்ள லேலண்ட் நிறுவனத்திற்குச் சென்று பாருங்கள், அங்கு இதுபோன்ற மேலும் 20 பஸ்கள் உள்ளன.

இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல, இதனை இயக்க முடியாது. ஒரு லீட்டர் டீசலுக்கு 1.5 அல்லது 2 கிலோமீட்டர் மட்டுமே பயணிக்க முடியும். இதுபோன்ற ஒரு திட்டம் கோட்டாபய அவர்களின் காலத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.

அது தோல்வியடைந்ததுடன், அதற்குப் பெரிய அளவிலான நஷ்டமும் ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version