கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் த.ஜெபதாஸ் மேற்கொண்டு வரும் நிதி முறைகேடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகப் பாடசாலை சமூகத்தினால் இன்று புதன்கிழமை (17) காலை அமைதி வழியிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை சமூகத்தினர் அதிபர் மீது பின்வரும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாடசாலைக் கணக்கறிக்கைகளில் முறைகேடு செய்தல் மற்றும் பொதுமக்கள் வழங்கும் நன்கொடை நிதியைப் பயன்படுத்துவதில் ஊழல் புரிதல்.
பாடசாலை சமூகத்தைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தல். தனிப்பட்ட பகமைகளைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி மற்றும் நலன்களைப் புறக்கணித்தல்.
இவ்விவகாரம் தொடர்பாகப் பளை கோட்டக்கல்விப் பணிமனை, வலயம் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் வழங்கியும், பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முறையிட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த முறைகேடுகளில் ஆளுங்கட்சியின் சில உள்ளூர் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், பாடசாலையை முடக்கிப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகப் பாடசாலை சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

