அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் புத்தளம் உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு சேதமடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனிஸ் பதியுதீன் தெரிவித்துள்ளார். இத்தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்குச் சொந்தமான உப்பளங்களில் மாத்திரம் 10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு நீர் புகுந்ததால் நாசமாகியுள்ளது.
புத்தளம், வனாத்தவில்லுவ, முந்தலம் மற்றும் கற்பிட்டி பகுதிகளில் உள்ள தனியார் உப்பு உற்பத்தியாளர்களின் அறுவடையிலிருந்து 10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மேலும், சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பும் நாசமாகியுள்ளது. இதனால் மொத்தமாக 25,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு சேதமடைந்துள்ளது.
இந்தத் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு அதிக பணம் செலவாகும் என்றும், எனவே, அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.