நாட்டில் தொல்பொருள் அல்லது மதத் தலங்களை முன்னிறுத்தி மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்று (16) நடைபெற்ற “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீட்டுத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக 2,500 வீடுகள் உட்பட, நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
“இன்றும் கூட சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு இன மோதல்களைத் தூண்ட முயற்சிக்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு என நாட்டின் எந்தப் பகுதியிலும் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்.”
இப்பிரதேச மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்தை உருவாக்கப் பங்களித்துள்ளனர். மக்கள் நலனைச் சிந்திக்காத அரசாங்கங்கள் மக்களிடமிருந்து தூரமாவதைத் தவிர்க்க முடியாது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழும் நாடே எமது தேவை. சிறப்பான பொருளாதாரம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு.
வடக்கிலுள்ள காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
No Room for Racism Under the Guise of Archaeology or Religion: President Anura Kumara Assures at Chavakachcheri Housing Project Launch.