இலங்கை முகங்கொடுத்திருக்கும் மருந்துப்பொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருந்துப்பொருள் கொள்வனவுக்கு உதவுவதற்குமென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படுவரும் நடவடிக்கைக்கு அவசியமான உதவிகளை மிச்செலின் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
அதன்படி மிச்செலின் அறக்கட்டளையின் உதவி மூலம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோடா மற்றம் மிச்செலின் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கொன்ராட் ப்ரினியேர்ஸ் ஆகியோரால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
உரியநேரத்தில் வழங்கப்பட்டுள்ள இவ்வுதவி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுதவிக்கு நன்றி கூறுகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையின் சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய அச்செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோடா, ‘இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக மிச்செலின் அறக்கட்டளை வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறுகின்றோம். அதேவேளை எமது விரிவான உலகளாவிய கொள்முதல் வலையமைப்பின் ஊடாக மருந்துப்பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்யவும், விநியோகிக்கவும் முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.