சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க டொலர்கள் எனும் வரலாற்று மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இன்று (29) அதிகாலை வர்த்தக நேரத்தின் போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,588 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
திடீர் மாற்றம்: நேற்று (28) 5,164 டொலர்களாக இருந்த விலை, சில மணிநேரங்களிலேயே சுமார் 400 டொலர்களுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை இந்தளவு குறுகிய காலத்தில் உச்சமடைய மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்குக் வீழ்ச்சியடைந்துள்ளமை.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் மேகங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்தமை.
சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் தமது கையிருப்பிற்காகத் தொடர்ச்சியாகப் பெருமளவிலான தங்கத்தைக் கொள்வனவு செய்து வருகின்றமை.
தற்போதைய போக்கின்படி, வரும் மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,000 டொலர்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்தினால் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளின் உள்ூர் சந்தைகளிலும் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

