யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கு: 169 மில்லியன் ரூபா நிதி கட்டிடங்கள் திணைக்களத்திற்கு மாற்றம்!

sports hall lighting

யாழ். மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை (Indoor Stadium) நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 169 மில்லியன் ரூபாய் நிதி, தற்போது கட்டிடங்கள் திணைக்களத்திற்கு மாற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (26) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

உள்ளக விளையாட்டு அரங்கு அமையவுள்ள காணி தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டச் சிக்கல்கள் காரணமாக கட்டுமானப் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் திரும்பப் போவதைத் தவிர்க்கும் நோக்கில், அது கட்டிடங்கள் திணைக்களத்திற்கு மாற்றப்படவுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமைந்தால் அதே இடத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அவ்வாறில்லை எனில், மாற்று நிலம் ஒன்றைத் தெரிவு செய்து அங்கு விளையாட்டு அரங்கினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த மிக அவசியமான இந்தத் திட்டம், சட்டச் சிக்கல்களால் இழுபறி நிலையில் இருப்பது கவலையளிப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

Exit mobile version