பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டப் பாவனையாளர் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, இம்மாதத்தில் மட்டும் இதுவரை 48 வியாபார நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பின் போது காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாமை, பொதிகளில் உள்ள விபரங்கள் மற்றும் விலைகளில் திருத்தங்களைச் செய்தமை, போலித் தயாரிப்புகள் மற்றும் SLS தரக்குறியீடு அற்ற பொருட்களை விற்பனை செய்தமை, மின்சார மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு உத்தரவாதச் சீட்டு (Warranty card) வழங்காமை பிபோன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் எரிவாயுவுக்கு (Gas) செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குதல் மற்றும் பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது போன்ற அசெளகரியங்களை எதிர்கொண்டால், 021-221-9001 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு மாவட்டப் பாவனையாளர் அதிகார சபைக்கு முறைப்பாடுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அரசாங்க அதிபர், பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

