வெனிசுவேலாவில் பாதுகாப்புச் சூழல் மிக மோசமடைந்து வருவதால், அந்நாட்டிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) நேற்று (ஜனவரி 10) அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெனிசுவேலாவிற்கு ‘நிலை-4: பயணம் செய்ய வேண்டாம்’ (Level 4: Do Not Travel) என்ற மிக உயர்ந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘கொலெக்டிவோஸ்’ (Colectivos) எனப்படும் அரசு ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தி வருவதாகப் புகார்கள் கிடைத்துள்ளன.
வீதிகளில் வாகனங்களை வழிமறிக்கும் இக்குழுக்கள், வாகனத்தில் இருப்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களா? அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவானவர்களா? என்பதற்கான ஆதாரங்களை (ஆவணங்கள், கைபேசித் தகவல்கள்) தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 3-ஆம் திகதி, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் பெரும் கலவரங்களும், அமெரிக்காவிற்கு எதிரான வன்முறைகளும் வெடித்துள்ளன.
தற்போதைய சூழலில் வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் செயல்படவில்லை என்பதால், அங்குள்ள அமெரிக்கர்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. எனவே, தரைவழிப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.