தரம் குறைந்த நிலக்கரி விநியோகம்: விநியோகஸ்தரிடம் இருந்து $2.1 மில்லியன் அபராதம் வசூலிப்பு!

coal

நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத நிலக்கரியை விநியோகித்தமைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இது குறித்த விபரங்களை வெளியிட்டார். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நிபுணர்களால் பெறப்பட்ட நிலக்கரி மாதிரிகள், மேலதிக ஆய்வுகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

இந்திய ஆய்வக முடிவுகளின்படி நிலக்கரியின் தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒப்பந்த விதிமுறைகளின்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கப்பலில் வந்த நிலக்கரியில் சிக்கல்கள் இல்லை. தற்போது 3-வது மற்றும் 4-வது கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரி எரிப்பினால் வெளியாகும் சாம்பல் குறித்து எழுந்துள்ள அச்சங்களுக்கு அவர், நிலக்கரி எரிப்பின் போது ‘பறக்கும் சாம்பல்’ (Fly Ash) மற்றும் ‘அடிச் சாம்பல்’ (Bottom Ash) என இரண்டு வகைகள் உருவாகின்றன.

பறக்கும் சாம்பலுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. இதனைச் சேகரிக்கத் தனித்துவமான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு: சாம்பல் திறந்த வெளியில் விடப்படாமல், உரிய முறையில் நுகர்வோர்களால் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தரம் குறைந்த நிலக்கரியினால் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கவும், உரிய தரத்தைப் பேணவும் லங்கா நிலக்கரி நிறுவனம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

 

Exit mobile version