ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில், ஊழியர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (26) வெள்ளிக்கிழமை, தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த 38 வயதான ஊழியர் ஒருவர், திடீரெனத் தனது சக ஊழியர்களைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதலை நடத்திய ஊழியரைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை. குறித்த ஊழியருக்கு மனநலப் பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா அல்லது பணியிடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தினாரா என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜப்பான் போன்ற குற்றச்சம்பவங்கள் குறைவாகக் கருதப்படும் நாட்டில், பணியிடத்தில் நடைபெற்ற இத்தகைய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.