பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஊர்காவற்துறையின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கடற்கோட்டை (Fort Hammenhiel) விவகாரத்திற்கு முறையான தீர்வு பெற்றுத் தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ. அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பாரம்பரியச் சின்னமாகும். தற்போது இது கடற்படை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
ஊர்காவற்துறை துறைமுகத்திலிருந்து கடற்கோட்டைக்கு வெறும் 4 நிமிடங்களில் செல்ல முடியும். ஆனால், தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து நேரடியாகச் சென்று பார்வையிட அனுமதி இல்லை.
பயணிகள் ஊர்காவற்துறை துறைமுகத்திலிருந்து கடற்கோட்டைக்குச் சென்று வர அனுமதிப்பதன் மூலம்:
பிரதேசத்தின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மேம்படும்.
வருமானம் குறைந்த நிலையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபையின் வருவாய் கணிசமாக உயரும்.
“எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை மக்கள் சென்று பார்வையிட ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் பிரதேசம் வலுப்பெற வாய்ப்புள்ளது” என தவிசாளர் அ. அன்னராசா தனது ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வடக்குத் தீவுப்பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தப் புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இக்கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

