சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலத்தைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 13) மாலை 6:30 மணிப் பூசையைத் தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பாற்சோறு படைக்கப்பட்ட பின்னர் மகா தேவாலயம் மூடப்படும்.
மீண்டும் நாளை (ஏப்ரல் 14) பிற்பகல் 2:00 மணிக்கே தேவாலயம் திறக்கப்படும் என்பதால், நாளை அதிகாலை 4:30 மணி மற்றும் முற்பகல் 10:30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறவிருந்த பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பூசை நடைபெறாத நேரங்களில் வரிசையில் நின்று பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என பஸ்நாயக்க நிலமே திலிண மதுசங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னரே பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியும்.
இதேவேளை, வருடாந்தம் நடைபெறும் கதிர்காம சித்திரை திருவிழா ஊர்வலம் நாளை (14) இரவு 7:45 மணியளவில் மிக விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது. மகா சங்கத்தினரின் செத்பிரித் பாராயணத்துடன் ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், மகா தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வள்ளி அம்மன் ஆலயத்தைச் சென்றடையும். அங்கு பாரம்பரிய சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஊர்வலம் மீண்டும் பிரதான வீதி வழியாகத் தேவாலயத்தை வந்தடையும்.
இந்த வண்ணமயமான ஊர்வலத்தில் யானைகள், கண்டி மற்றும் கீழ்நாட்டு நடனக் குழுக்கள், காவடிக் குழுக்கள் மற்றும் தீப்பந்தக் காட்சிகள் எனப் பல கலாசார அம்சங்கள் இடம்பெறவுள்ளன. ஊர்வலம் நிறைவடைந்து தேவாலயத்தின் உள்வாரியான பணிகள் முடிந்த பின்னரே, மீண்டும் பக்தர்களின் பூசை வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் கதிர்காமத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.