தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப் 27) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) முதல் தகவல் அறிக்கையை (FIR) கரூர் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் , கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது தொடர்பான பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

