இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது இரண்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மேற்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் ரங்கல’ மற்றும் துறைமுக பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையில் 1,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
‘இலங்கை கடற்படை கப்பல் கெமுனு’ மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 65 வயதுடைய பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முறையே கொழும்பு துறைமுக பொலிஸாரிடமும், ராகம பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்யப்பட்டு சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் இவ்வாறான பொருட்களைத் தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

