இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாம் பதவியில் இருந்து விலகப் போவதாக வௌியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. இத்தகைய செய்திகள் தவறான புரிதல்களால் பரப்பப்படுகின்றன.
காலத்தின் தேவைக்கேற்ப கட்சியின் ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகளைத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு, தேவையான மாற்றங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்னோர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்தாபனத்தை, ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே தமது நோக்கம் என ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
