தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபரின் இந்தக் கூற்று ஆதாரமற்றது என்றும், தன்னை அவமதிக்கும் நோக்கம் கொண்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், பாதாள உலகக் குழுக்களுடான தொடர்புகளால் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபட்டுள்ள பாதாள உலக நபர்களுடனான பரிவர்த்தனைகள் காரணமாகவே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை மா அதிபர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஜகத் விதான, “எனக்குப் பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் 1989 முதல் சட்டப்பூர்வமாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். நான் எந்தச் சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை,” என்று இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் தலையீட்டின் மூலம் நாடாளுமன்றத்தில் காவல்துறை பாதுகாப்பைப் பெற்றதால் காவல்துறை மா அதிபர் கோபமடைந்துள்ளதாக விதான குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தனக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும், அதன் மூலம் தனது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ‘பொறுப்பற்ற மற்றும் தீங்கிழைக்கும்’ கருத்துக்களுக்காகவே காவல்துறை மா அதிபருக்கு எதிராகத் தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

