அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்களும் இன்று (23) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பமான இந்தப் பணிப்புறக்கணிப்புத் தொடர்ந்து 48 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கிய இணக்கப்பாடுகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. மருத்துவர்களின் இந்தத் தீர்மானத்தால் யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சிகிச்சைகள் முற்றாக முடங்கியுள்ளன.
யாழ். குடாநாட்டின் பல்வேறு தூர இடங்களிலிருந்து அதிகாலை முதலே சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள், மருத்துவர்களின்றித் தங்களது சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் விடுதிகளில் உள்ள நோயாளர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.