இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அமெரிக்காவின் அதிநவீன செயற்கைக்கோளைச் சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
‘பாகுபலி’ என அழைக்கப்படும் 43.5 மீற்றர் உயரமுள்ள எல்.வி.எம்-3 விண்கலம், இரண்டு வலிமையான பூஸ்டர்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்காவின் ‘ஏ.எஸ்.டி ஸ்பேஸ் மொபைல்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘புளூபேர்ட் 6’ (BlueBird 6) என்ற அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இது சுமந்து சென்றது.
விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களில், பூமியிலிருந்து 520 கிலோமீற்றர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த ‘புளூபேர்ட் 6’ செயற்கைக்கோளானது, சாதாரண ஸ்மார்ட் கைபேசிகளுக்கு விண்வெளியில் இருந்து நேரடியாக பிரோட்பேண்ட் (Broadband) இணைய சேவையை வழங்கும் திறன் கொண்டது. இதற்கு எவ்வித மேலதிக உபகரணங்களும் தேவையில்லை என்பதால், உலகத் தொலைத்தொடர்பு துறையில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் இதுவாகும். இதன் மூலம் உலகளாவிய வணிக ரீதியான விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.