குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த சோதனைகளின் போது, நேற்று (19) மாத்திரம் 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 29,504 பேர் பொலிஸாரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:
பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 282 பேர் மற்றும் மேலதிகமாக 177 பேர் என மொத்தம் 459 பிடியாணைதாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துச் சட்டங்களை மீறிய 4,384 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 427 பேர் , கவனக்குறைவாக வாகனம் செலுத்தியோர் 06 பேர் சிக்கியுள்ளனர்.
குற்றச் செயல்களைக் குறைக்கவும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியைத் துண்டிக்கவும் இந்த நாளாந்த சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய சோதனைகளின் போது பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.