ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ ஏதேனும் தாக்குதல்களை மேற்கொண்டால், அது மிக மோசமான மற்றும் “கடுமையான பழிவாங்கலுக்கு” வித்திடும் என ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் காசெம் ஜலாலி (Kazem Jalali) எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ (Sputnik) ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில், அவர் இந்த அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈரானின் பாதுகாப்பு விவகாரங்களில் எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீட்டையும் தாங்கள் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்பதை அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் முன்னாள் தலைவரும் மொஜ்தபாவின் தந்தையுமான அயதுல்லா அலி காமெனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபையால் மொஜ்தபா காமெனி ஒருமனதாக புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோருவதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஈரான் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தூதுவர் ஜலாலி தெரிவித்தார்.
“ஈரானிய மக்கள் தற்போது ‘இரத்தத்திற்கு இரத்தம்’ என்ற அடிப்படையில் பழிவாங்குவதையே எதிர்பார்க்கிறார்கள்” எனத் தூதுவர் ஜலாலி குறிப்பிட்டது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, மொஜ்தபா காமெனி தனது முதல் உரையில், ஹர்முஸ் நீரிணையைத் தொடர்ந்து மூடி வைப்பதோடு, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் என்றும் எச்சரித்திருந்தார். இது, போர் தற்போதைய சூழலில் இன்னும் நீண்ட காலம் நீடிக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.
இந்தத் தலைமைத்துவ மாற்றம் மற்றும் அதைத் தொடர்ந்து ஈரான் விடுத்து வரும் தொடர் எச்சரிக்கைகள், சர்வதேச அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, ஈரான் தனது முழுப்பலத்தையும் திரட்டி வருவதாகத் தெரிகிறது. தூதுவர் ஜலாலியின் இந்த எச்சரிக்கை, ஈரானின் பாதுகாப்பு விவகாரங்களில் இனிவரும் காலங்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவிற்கு உணர்த்தியுள்ளது.