மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை!

18 11

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆற்றிய முதல் உரையில், “தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம்” என சூளுரைத்துள்ளார். அமெரிக்கா பிராந்தியத்தில் உள்ள தனது அனைத்துத் தளங்களையும் மூட வேண்டும் என்றும், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைக்கும் என்றும் அவர் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதல்கள் எரிசக்தி சந்தையை நிலைகுலையச் செய்துள்ளன. ஈராக்கிய துறைமுகப் பகுதியில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததில், குறைந்தபட்சம் ஒரு பணியாளர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு ஈரானியப் படகுகளே காரணம் என ஈராக்கிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல், வளைகுடா பிராந்தியத்தில் மேலும் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனானின் ஹெஸ்பொல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவிலான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு, அதற்குப் பதிலடியாக பெய்ரூட்டில் இஸ்ரேலியத் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.

கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சுப் பிரச்சாரத்தால் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), வரலாற்றில் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடையூறு இதுவென வர்ணித்துள்ளது. ஈரானின் நீண்ட தூர ஆயுதங்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறிவரும் நிலையில், குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குள் ஈரானிய ட்ரோன்கள் அதிகளவில் ஊடுருவியிருப்பது அவர்களின் கூற்றுக்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறி வந்த போதிலும், கள நிலவரம் முற்றிலும் மாறாக உள்ளது. எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை முழுமையாக அழிப்பதும், அந்நாட்டின் நிபந்தனையற்ற சரணடைதலுமே தங்கள் இலக்கு என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனினும், முற்றுகையிடப்பட்ட ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான தெளிவான திட்டத்தையோ அல்லது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவையோ டிரம்ப் நிர்வாகம் இதுவரை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version