மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கொல்வோம் என ஈரான் இராணுவம் பகிரங்கமாகச் சபதம் செய்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), நெதன்யாகுவை “தொடர்ந்து துரத்திச் சென்று அழிப்போம்” என அந்நாட்டு அரச ஊடகமான ‘மெஹர்’ செய்தி நிறுவனம் வாயிலாக எச்சரித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய இராணுவம் தனது 52வது கட்டத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் இஸ்ரேலில் உள்ள முக்கிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மூன்று அமெரிக்க இராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதிப்படுத்தியுள்ளன. இஸ்ரேலின் தற்காப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கச் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, ஹெஸ்பொல்லா போராளிகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு மற்றும் அவரது இருப்பிடம் குறித்த சர்ச்சைக்குரிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா என்ற ஊகங்களும் வதந்திகளும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது இஸ்ரேல் முழுவதிலும் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு மொபைல் போன்கள் ஊடாகப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான நிலவறைகள் மற்றும் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உத்தரவிட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் நட்பு அமைப்புகளின் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கை ஒரு முழுமையான போருக்குள் தள்ளியுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், உலகளாவிய ரீதியில் அமைதி குறித்த பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.