அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இடங்களை மாற்றியமைக்கக் கோரி, ஈரான் கால்பந்து கூட்டமைப்பு FIFA நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என்பதே ஈரானின் முதன்மைக் கோரிக்கையாகும்.
தற்போது ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்குத் தம்மால் உறுதியளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பு விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, அமெரிக்காவில் ஈரான் விளையாட வேண்டிய போட்டிகளை மெக்சிகோவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் மார்ச் 16 அன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்ற விதிகளுக்கு மத்தியில், வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் FIFA-விற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
சர்வதேச அளவில் ஈரானியத் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், உலகக் கோப்பை கால்பந்து தொடர் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரானின் இந்தக் கோரிக்கை குறித்து FIFA இதுவரை இறுதி முடிவெதனையும் அறிவிக்கவில்லை. ஒருவேளை இடமாற்றம் செய்யப்பட்டால், அது உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.

