ஈரானிய ரியால் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாடு முழுவதும் பாரிய போராட்டங்களும் அமைதியின்மையும் தீவிரமடைந்துள்ளன.
தலைநகர் தெஹ்ரானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்புகள் இன்று நான்காவது நாளாக நீடிக்கின்றன.
தற்போது கராஜ் (Karaj), ஹமேடன் (Hamadan) உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு இந்தப் போராட்டங்கள் பரவியுள்ளன.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் காவல்துறையினர் கண்ணீர் புகைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ள சூழலில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்:
ஈரானிய மத்திய வங்கி ஆளுநர் முகமதுரேசா ஃபார்சின் (Mohammadreza Farzin) தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை முன்வைக்குமாறும், பொறுப்புடன் செயற்படுமாறும் உள்விவகார அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் பொருளாதார நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.