அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், தங்களது தேசிய அணி பங்கேற்காது என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் துன்யாமலி (Ahmad Donyamali) தெரிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போதைய நிலையில் தங்களது வீரர்கள் அமெரிக்க மண்ணில் விளையாடுவது பாதுகாப்பற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் இந்தத் தீர்மானம் சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “எங்கள் தலைவரைப் படுகொலை செய்த ஒரு நாட்டில், எவ்வித சூழ்நிலையிலும் எங்களால் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது” என்று அமைச்சர் அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு ஈரானிய அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதால், இத்தொடரிலிருந்து விலகுவதே பொருத்தமானது என ஈரான் கருதுகிறது.
முன்னதாக, இத்தொடரில் ஈரான் அணி பங்கேற்பதை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்ததையும், இது குறித்து பிபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ பேசியிருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தாலும், ஈரானின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த முடிவு, குழு ஜி (Group G)-இல் உள்ள பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளின் போட்டிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஈரானின் இந்த விலகல் குறித்து பிபா (FIFA) தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான கருத்தும் வெளியாகவில்லை. எனினும், ஒரு நாடு உலகக்கோப்பைத் தொடரிலிருந்து இவ்வாறு விலகுவது பிபா சட்டதிட்டங்களின்படி ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈரான் ஏற்கனவே தகுதி பெற்று, குழுப் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு உலக கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியல் மற்றும் விளையாட்டுத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

