ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் ஈரானியர்களுக்கு விடுத்த நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இஸ்ரேலிய இராணுவம் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக ஈரானிய மக்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில், “உங்கள் பாதுகாப்பிற்காக இன்று இரவு 9:00 மணி வரை இரயில்களைப் பயன்படுத்துவதையும், ரயில் நிலையங்களுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்; மீறினால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை வெளியான சில மணிநேரங்களிலேயே மஷ்ஹத் நகரில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
ஈரானின் ‘நூர் நியூஸ்’ (Nour News) தகவலின்படி, மஷ்ஹத் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணத்தைத் தவிர்க்க முடியாத நிலையில் இருந்த பயணிகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். “தற்போது நகரில் சூழல் முற்றிலும் அமைதியாகவே உள்ளது. இருப்பினும், எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என அவர் மேலதிக விளக்கமளித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் மற்றும் ரயில்வே போன்ற குடிமை உள்கட்டமைப்புகள் (Civilian Infrastructure) மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காஷான் (Kashan) பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மஷ்ஹத் நகரின் இந்தத் தடை உத்தரவு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தற்காலிகத் தடையானது நிலைமை சீராகும் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

