இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

12 20

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (மார்ச் 23, 2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த முக்கிய கருத்தை வெளியிட்டார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய ஈரான் உதவும் என அவர் உறுதியளித்தார். “இலங்கை அரசாங்கம் எவ்விதமான கோரிக்கைகளை முன்வைத்தாலும், அவற்றை உடனடியாக நிறைவேற்ற ஈரான் தயாராக உள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ஒருபோதும் மூடவில்லை என்பதை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” எனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் (Torpedo Attack) ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டபோது, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே அங்கிருந்தவர்களை மீட்க இலங்கை கடற்படை முன்வந்ததை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். “இலங்கை செய்த அந்த மனிதாபிமான உதவியை ஈரான் தேசம் ஒருபோதும் மறக்காது. இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது; எமது தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு” என அலிரேசா டெல்கோஷ் புகழாரம் சூட்டினார்.

மேலும், தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரானில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இலங்கையுடனான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைத் தடையின்றி முன்னெடுக்க ஈரான் உறுதிபூண்டுள்ளதாகத் தூதுவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.


Exit mobile version