வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களைக் கைது செய்யச் சர்வதேச காவல்துறையின் (INTERPOL) ஊடாக 95 சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பேச்சாளர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட மூவர் குறித்த கூடுதல் விபரங்களைக் காவல்துறை ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தினார்:
இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் பாதாள உலகக் குழு நடவடிக்கைகள் மற்றும் பாரிய நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தல் சட்டத்தின் (Extradition Law) கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. 10 சந்தேக நபர்கள் சிவப்பு அறிவித்தல் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டனர். 11 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 21 முக்கிய குற்றவாளிகள் சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் தங்கியிருந்து கொண்டு இணையவழியாகப் பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதில் காவல்துறை தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, தற்போது மொத்தம் 95 பேருக்கு எதிராகச் சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் நடைமுறையில் உள்ளன.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் அனைத்துக் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதே தங்களது இலக்கு என்றும், இதற்காகப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் மேலும் குறிப்பிட்டார்.