இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை வெளிவராத பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த வேளையில், ஒரு முக்கிய முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து அதிகாரிகளும் வெளியேற்றப்பட்ட பின், ஜனாதிபதியும் ஜெய்சங்கரும் சுமார் அரை மணி நேரம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புச் செய்தியை இதன்போது ஜெய்சங்கர் கையளித்தார். இலங்கையின் பொருளாதார நலனுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எதிர்பாராத நிவாரணப் பொதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்திய அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து, சீன உயர்மட்டத் தூதுவர் வாங் ஜுன்ஷெங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
அண்மைய சூறாவளிப் பேரழிவிலிருந்து மீள சீனா ஒரு பெரிய திட்டத்தின் கீழ் உதவத் தயாராக இருப்பதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரை ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் நேரில் சென்று வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இலங்கையில் சீனா முன்னெடுக்கவுள்ள பாரிய செயற்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் கருதி, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகளையும் முதலீடுகளையும் வழங்கி வருவது, பிராந்திய அரசியலில் இலங்கையின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.