மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடரப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் 30% முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுக்கப்பட்டு வருவதாகவும், இதைக் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் இவ்வாறு செயற்படுவதை ஆராய காணி அமைச்சால் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க முடியுமா என்றும் அவர் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் ஊடாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.
காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்குக் காணி வழங்கியுள்ளோம், ஆனால் அவர்களுக்கு உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
காணி உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணங்களாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்.காணி கோரி விண்ணப்பித்தவர்களில் சிலர் காணி கச்சேரிக்கு வருகை தராதமை. 8 பேர்ச்சிற்கு குறைந்த காணி விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டது. காணி முரண்பாடுகள் இருக்கும் அரச காணிகளில், அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாததால் உறுதி வழங்க முடியாமல் போனமை.