பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார். இந்தச் செயற்றிட்டம் 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் 10ஆம் ஆண்டு சர்வதேச கீதை மகோற்சவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கீதை மகோற்சவ கொண்டாட்டத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இந்திய வெளிவிவகார அமைச்சு இணைந்துள்ளது. இந்த ஆண்டு 70 லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பின்வரும் கருத்துக்களைப் பதிவு செய்தார்.
பகவத் கீதை உலகின் வழிகாட்டியாகத் திகழ்கிறது. இது நாடுகளுக்கும் மனிதர்களுக்கும் காலம் காலமாக உள்ள வலிமையையும் ஆன்மிகத் தெளிவையும் வழங்கி வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் கீதை கொண்டாட்டங்களில் பங்கேற்க வெளிநாட்டு அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக உரையாடல்கள் பரந்து விரிந்த முறையில் நடைபெறுவதை அமைச்சு ஊக்குவித்து வருகிறது. கீதை கொண்டாட்டங்கள் வெறும் கலாசார ஒன்றுகூடல் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.