இந்தியா
தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி
தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தெலுங்கர்கள் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையின் முழு உருவாக்கமே அவர்கள் தான். அவர்களை எப்படி பிரித்து பார்க்க முடியும். நடிகை கஸ்தூரியின் பேச்சை இணையதளத்தில் நீக்க என்ன நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கஸ்தூரி தரப்பில், “தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.