முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அங்கு புதிய ஐந்து மாடி மருத்துவ விடுதித் தொகுதியை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையானது அந்த மாவட்டத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் பிரதான சுகாதார மையமாகத் திகழ்கிறது.
தற்போது இங்கு 08 விசேட நிபுணத்துவ அலகுகள் இயங்கி வருகின்றன. நோயாளர்களுக்காக மொத்தம் 195 கட்டில் வசதிகள் மாத்திரமே காணப்படுகின்றன.
மூன்றாம் நிலை சிகிச்சை நிறுவனமாக (Tertiary Care Institution) இந்த மருத்துவமனையை உயர்த்துவதற்காக ஐந்து மாடிகளைக் கொண்ட புதிய விடுதித் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நோயாளர்களுக்குக் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
இந்த நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கவும், இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.