இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேபாளத்தின் சில பகுதிகளில் மதவாத வன்முறைகள் வெடித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்தியா தனது எல்லைகளை முழுமையாக மூடியுள்ளது.
நேபாளத்தின் தெற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மதக் குழுக்களுக்கிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது எல்லையோர இந்தியப் பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க இந்தியப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் பர்சா (Parsa) மாவட்ட நிர்வாகம், பீகாரின் ரக்சௌல் எல்லைக்கு அருகிலுள்ள பிர்கஞ்ச் (Birgunj) நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்திய-நேபாள எல்லையில் அவசர மருத்துவச் சேவைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் அனைத்துப் போக்குவரத்துகளும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.எல்லைப் பாதுகாப்புப் படையினர் (SSB) எல்லையோரக் கிராமங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென எல்லைகள் மூடப்பட்டதால், வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், உறவினர்களைச் சந்திக்கவும் எல்லை தாண்டக் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இருபுறமும் சிக்கித் தவிக்கின்றனர். நிலைமை சீரான பின்னரே எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

