வெனிசுலா ஜனாதிபதி கைது: இந்தியா கவலை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தல்!

gettyimages 2247859148 20260101214546430

வெனிசுலாவில் அமெரிக்கச் சிறப்புப் படையினரின் வான்வழித் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம் குறித்து இந்தியா தனது உத்தியோகபூர்வ கவலையை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையை இந்தியா தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

வெனிசுலா மக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளுக்கான ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்காத வகையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

கராகஸில் (Caracas) உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாத கால அழுத்தங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் வெனிசுலாவின் இடதுசாரித் தலைவரான நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டார். அவர் தற்போது விசாரணைக்காக நியூயோர்க்கிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Exit mobile version