உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் திகதியை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, உணவு ஆலோசனைக் குழுவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளார். 2023 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட பின்வரும் விதிமுறைகளுக்கே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது:
உணவுப் பொருட்களில் இடப்பட வேண்டிய லேபல்கள் மற்றும் விளம்பரப்படுத்தல் தொடர்பான புதிய நடைமுறைகள்.
திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவைக் குறிக்கும் வர்ணக் குறியீட்டு (Color Coding) விதிமுறைகள். உணவில் அயடீன் கலத்தல் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு (Trans-fat) தொடர்பான கட்டுப்பாட்டு விதிமுறைகள்.
மேற்குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளும் 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது. உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு புதிய தரநிலைகளுக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள மேலதிக அவகாசம் அளிக்கும் நோக்கில் இந்த ஒத்திவைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

