கெஹெலிய சிறைக்குச் சென்றால் பிரதமரும் செல்ல வேண்டும்: நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேசம்!

images 6 2

தரம் 6 ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் (Module) இடம்பெற்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் சிறைத்தண்டனையுடன் ஒப்பிட்டு கருத்துக்களை முன்வைத்தார்.

தரமற்ற ஊசி மருந்து விவகாரத்தில் அமைச்சர் கெஹெலிய நேரடியாக ஊசி போடவில்லை என்றாலும், அமைச்சராக அவரே சிறைக்குச் சென்றார். அதேபோல், கல்வி அமைச்சராகப் பிரதமர் இருக்கும்போது பாடத்திட்டத் தவறுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

“மாகாண சபைப் பணத்தை முன்கூட்டியே மீளப் பெற்ற விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தும், அரசியல் ரீதியாக நானே சிறைக்குச் சென்றேன்” எனத் தனது கடந்த காலச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத் ஆகியோருக்குச் சட்டம் ஒருவிதமாகவும், பிரதமருக்கு ஒருவிதமாகவும் இருக்க முடியாது. தவறுக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும், இல்லையெனில் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் (Module) தப்பான மொழிநடை மற்றும் பொருத்தமற்ற உதாரணங்கள் உள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version