ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டது.

இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் இருசக்கர வாகனம் பேருந்தின் கீழ்ப்பக்கம் சிக்கியதாகத் தெரிகிறது.

மோதியதில் பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்தது. அடுத்த சில வினாடிகளில் தீ மளமளவெனப் பேருந்தின் மற்ற பகுதிக்கும் பரவியுள்ளது. இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாகத் தெரிகிறது.

விபத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது தவித்தனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் (Emergency Exit) கதவை உடைத்துக்கொண்டு லேசான காயங்களுடன் வெளியேறினர். பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் (கிளீனர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வமான அரசுத் தரப்பு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version