பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் ஒன்று நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
இன்று (20) முற்பகல் 11:00 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இயக்கச்சி பகுதியிலிருந்து இயக்கச்சி சந்தி நோக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் தனது விசேட மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக வந்த ‘பட்டா’ (Batta) ரக வாகனம், மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த நபர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்தில் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பளை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தப்பியோடிய வாகனத்தை அடையாளம் காண்பதற்காக, விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.