இந்திய அமைச்சருடன் மலையகத் தலைவர்கள் சந்திப்பு: 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார் செந்தில் தொண்டமான்!

MediaFile 1 6

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று (23) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பில் இ.தொ.கா சார்பில் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அனர்த்த காலங்களில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக அவர்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார் செந்தில் தொண்டமான், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்கும் வரை, அவர்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யத் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல்.

பாதிக்கப்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்படும் போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.

இந்தியப் பிரதமரின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தைப் போன்று, LIC Lanka ஊடாகப் பெருந்தோட்ட மக்களுக்கான விசேட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.

இந்திய வம்சாவளி அந்தஸ்துக்கான OCI அட்டையைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, பிறப்புச் சான்றிதழ் அல்லது தூதரக ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அதனைப் பெறுவதை இலகுபடுத்துதல்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சாதகமான பதில்களை வழங்குவார் என மலையகத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version