ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பதுளை மாவட்டத்தின் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன விடுத்துள்ள விசேட அறிவிப்பில், பதுளை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படக்கூடிய தாழ்நிலங்கள் மற்றும் மலைச்சரிவுகளில் வசிக்கும் மக்கள் சாத்தியமான ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் சாய்வதைப் போன்ற தோற்றம், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் அல்லது பாறைகள் உருளுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.
பகுதிகளில் மழைமானி வசதிகள் இருப்பின், மழை வீழ்ச்சியின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் மக்களை வெளியேற்றுவதற்கும், தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும் மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

