‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத அனைத்து கட்டுமானங்களையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநகர சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) முறையான பரிந்துரைகள் இன்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க முடியாது. நகர சபையின் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், எவ்வித ஒப்புதலும் இன்றி சில குழுக்கள் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சில குழுக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களுக்கு (Approved Plans) மாறாகக் கட்டுமானங்களை முன்னெடுப்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயங்களுக்கு மத்தியில், இத்தகைய சட்டவிரோத கட்டுமானங்கள் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

