டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

world 59

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ் தொற்றிலிருந்து தமது குடிமக்களை மீட்பதற்காக ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விசேட விமானங்களை அனுப்பவுள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்காக மேலதிகமாக இரண்டு விமானங்கள் அனுப்பப்படவுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளும் இதற்கான விமானங்களை உறுதிப்படுத்தியுள்ளன. கேப் வெர்டே கடற்கரையிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், நாளை (ஞாயிறு) அதிகாலை டெனரிஃப் தீவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, இந்தக் கப்பலில் இதுவரை எட்டு பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு டச்சு தம்பதியினர் மற்றும் ஜெர்மன் பிரஜை என மூவர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவருக்குத் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பொதுவாக கொறித்துண்ணிகள் (எலிகள் போன்றவை) மூலம் பரவும் இந்த ஹன்டா வைரஸ், அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்பதால், சர்வதேச சுகாதார நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றன.

கப்பல் கரையை வந்தடைந்ததும், அனைத்துப் பயணிகளும் 17 ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள். எனினும், கப்பலைப் பராமரிப்பதற்காக 30 ஊழியர்கள் மட்டும் கப்பலிலேயே தங்கியிருப்பார்கள் என ஸ்பெயினின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் கப்பலிலேயே வைக்கப்பட்டு, கப்பல் முழுமையாகக் கிருமி நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக வெளியேற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் திங்கட்கிழமை பிற்பகல் வரை முன்னெடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸைச் சந்திக்கவுள்ளார். பின்னர் அவர் ஸ்பெயினின் சுகாதார அமைச்சர்களுடன் இணைந்து டெனரிஃப் தீவுக்குச் செல்லவுள்ளார். தத்தமது நாடுகளுக்கான விமானங்கள் தயாராகும் வரை பயணிகள் எவரும் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஸ்பானிய குடிமக்களுக்கே வெளியேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Exit mobile version