ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 20 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காலி மற்றும் தெஹியத்தக்கண்டிய இடையே பயணித்த அரச பேருந்தும், திஸ்ஸமஹாராம மற்றும் மாத்தறை இடையே பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது அரச பேருந்தில் சுமார் 57 பயணிகள் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் சில வெளிநாட்டினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரும் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர். தனியார் பேருந்தின் பின்பகுதியில் அரச பேருந்து மோதியதால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த வர்த்தக நிலையத்தின் மதிலை உடைத்துக் கொண்டு அருகில் இருந்த சிறிய கடையொன்றையும் சேதப்படுத்தியது. விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ஹம்பாந்தோட்டை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதலில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளன. அதிவேகமாக வந்த அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சேதமடைந்த கடைகளுக்கான நட்டஈடு மற்றும் சாரதிகளின் கவனக்குறைவு குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

