இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியானது, காலநிலை மாற்றத்தினால் நாடு எதிர்கொள்ளும் பேரிடர் அபாயங்களின் நேரடி வெளிப்பாடு என ‘கிரீன்பீஸ் தெற்காசியா’ (Greenpeace South Asia) தனது புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்தச் சூறாவளியை ஒரு தற்செயலான வானிலை நிகழ்வாகப் பார்க்காமல், அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் மாறிவரும் வானிலை அமைப்புகளின் விளைவாகக் கருத வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. வழக்கமான சூறாவளிகளைப் போலக் கடலோரப் பகுதிகளை மட்டும் பாதிக்காமல், டிட்வா சூறாவளி உள்நாட்டுப் பகுதிகளிலும், குறிப்பாக மத்திய மலைப்பகுதிகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூறாவளியின் தனித்துவமான அம்சம் அதன் மெதுவான நகர்வு ஆகும். பல நாட்கள் நீடித்த குறைந்த அழுத்த அமைப்பு, நாடு முழுவதும் தீவிர மழைப்பொழிவை ஏற்படுத்தி வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தூண்டியது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிக ஆபத்துள்ள வலயங்களாகக் கருதப்படாத இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டதற்கு, பல நாட்களாகத் தொடர்ந்த இந்தத் தீவிர மழைப்பொழிவே காரணம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, நாட்டின் உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்தன.
இந்தத் தாக்கங்கள் குறித்த விரிவான பகுப்பாய்வை முன்வைத்துள்ள அறிக்கை, புவி வெப்பமடைதலே இதற்கு முக்கிய காரணம் என்கிறது. மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமடைதலால் தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட புவி வெப்பநிலை 1.3°C உயர்ந்துள்ளது. இது சூறாவளியுடன் தொடர்புடைய ஐந்து நாள் மழைப்பொழிவை, சாதாரண சூழலை விட 28 சதவீதம் முதல் 160 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக உலக வானிலை பண்புக்கூறு அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், வட இந்தியப் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.2°C அதிகமாக இருப்பது, வளிமண்டலத்தில் அதிக வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் சேர்த்து மழைப்பொழிவு மற்றும் வெள்ள அபாயத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
சர்வதேச காலநிலை மாற்றக் குழுவின் (IPCC) மதிப்பீடுகளுக்கு இணங்க, உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து உயரும் பட்சத்தில், இத்தகைய அதிதீவிர மழைவீழ்ச்சி சம்பவங்கள் வருங்காலத்தில் அடிக்கடி நிகழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தனது பேரிடர் முகாமைத்துவக் கொள்கைகளை காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த விழிப்புணர்வு, எதிர்காலப் பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு அடிப்படையாக அமையும் என கிரீன்பீஸ் அமைப்பு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

