புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module) தகாத இணையத்தள முகவரி உள்ளடக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (04) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட உள்ளக விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், தவறுக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தவறுக்காகப் பிரதமரை மட்டும் இலக்காகக் கொண்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இது ஒரு கூட்டுக் கொள்கையின் அடிப்படையில் நடந்த செயல்; இதில் ஒரு இடத்தில் பிழை ஏற்பட்டுள்ளதை அரசு ஏற்றுக்கொள்கிறது.
அந்தப் பாடத் தொகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய விடயம் உடனடியாக நீக்கப்படும். கல்விச் சீர்திருத்தங்கள் மேலும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படும்.
தகாத இணையத்தளப் பெயர் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன், குறித்த பாடத் தொகுதிகளின் விநியோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.
இது வெளித்தரப்பு ஒன்றின் சதித்திட்டமாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா வித்தானபதிரன தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் கலுவெவ மேலும் தெரிவிக்கையில், இது இறுதியான அச்சிடப்பட்ட பதிப்பு அல்ல எனவும், இது சட்டரீதியாக இறுதி செய்யப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இவ்வாறான தவறுகளுக்குப் பொறுப்பானவர்கள் தப்ப முடியாது என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

