ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) பிற்பகல் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் முக்கிய ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தரம் 01-க்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகள் எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
கற்றல் தொகுதிகளைத் (Learning Modules) தயாரிப்பதில் நிலவும் சவால்கள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டே தரம் 06-க்கான சீர்திருத்தங்கள் 2027 வரை பிற்போடப்பட்டுள்ளன.
கல்வி மறுசீரமைப்பு ஒன்றின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், புதிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது கல்வி மறுசீரமைப்பு மட்டுமன்றி, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்ற நடைமுறைகள், காலதாமதமாகி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் தரமுயர்த்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது