அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

1731919585 Ravi L

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மாகாணசபைத் தேர்தல்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேர்தலை நடத்தத் தேவையான நிதி இருந்தும் அரசாங்கம் ஏன் தயங்குகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனநாயக ரீதியாக ஆட்சி நடத்துவதாகக் கூறும் அரசாங்கம், அரசியலமைப்பிற்கு இணங்க இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தியே தீர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் நம்பிக்கை வெளியிட்டார்:

இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் சரியான திசையில் பயணிப்பதாகவும், வெளிநபர்களின் தலையீடுகள் இன்றி உரிய நேரத்தில் இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பேசுகையில், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான வெற்றிடம் குறித்துச் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது.

கணக்காய்வு திணைக்களத்திற்கு வெளியிலிருந்து ஒருவரைப் பரிந்துரைப்பது, அந்தத் திணைக்களத்திற்குள் தகுதியானவர்கள் இல்லை என்பதைக் காட்டுவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version